கோவை மாநகர் மாவட்ட மாணவர்கள் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோவை சித்தா புதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார்.

Published Date: January 26, 2024

CATEGORY: CONSTITUENCY

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்:

கோவை மாநகர் மாவட்ட மாணவர்கள் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோவை சித்தா புதூரில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நா. கார்த்திக் தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

நம்மை இணைக்கும் முக்கிய குணம் தமிழ் பற்று. இந்த தமிழ் பற்றை ஒழிக்கவும், மறக்கவும் சிலர் திட்டமிடுகிறார்கள். 1938 ஆம் ஆண்டில் இருந்து கட்டாய இந்தி கல்வி என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மொழியை பேசாதவர்கள் இருக்கும் இடத்தில் திணிக்க வேண்டும் என்றால் என்ன காரணமாக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழி கொள்கையை என்று அண்ணா தெளிவாக கூறினார். தொழிலில், கல்வி வரலாற்றை அறிவதற்கு தேவையில்லாத மொழியை திணிக்க வேண்டும் என்றால் அதற்கு  என்னவாக இருக்க முடியும். தனி அடையாளத்தை அழித்து, மறைத்து பிற இடங்களில் இருப்பது போன்று ஆக்கி தனித்துவத்தை அகற்றி அடிமைகளாக ஆக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்தியை திணைத்து தமிழை பாதிக்கும் அளவுக்கு செயல்படுத்தினார்கள்.

1938 ஆம் ஆண்டு இதற்கு நீதி கட்சியும், அப்போது உருவாக்கப்பட்ட திராவிடர் கட்சியும் சேர்ந்து பெரும் எதிர்ப்பை தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு கல்வி பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளது. இதற்கு காரணம் சமூக நீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக சமூகத்தை உருவாக்கியதால் தான். இவ்வாறு அவர் பேசினார். 

இதில் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்.எம்.பி முருகன், பீளமேடு பகுதி 2 செயலாளர் நாகராஜ், மாணவர் அணி அமைப்பாளர் சிவ பிரகாஷ், மேயர் கல்பனா, மாநில மாநகர அணி துணை செயலாளர் வி.ஜி. கோகுல், தீர்மானக் குழு இணை செயலாளர் நாச்சிமுத்து, வக்கீல் பி.ஆர். அருள்மொழி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் விஷ்ணு பிரபு, மண்டல தலைவர் இலட்சுமி இளஞ்செல்வி,கார்த்திக், பொது சுகாதாரக் குழு தலைவர் மாறிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran